இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர்கள் குழுவொன்று இதன் மூலம் பயனடைவதுடன், முதற்கட்டமாக, ஹம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு எழுபது முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் மேலதிக வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக சாரதிகளின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு, மின் பொறியியல், தச்சு, முடி வெட்டுதல் மற்றும் கட்டிட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் மாகம் ருஹுனுபுர நிர்வாக வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்